Monday, January 25, 2016

தினம் ஒரு பாசுரம் - 63

 தினம் ஒரு பாசுரம் - 63


முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*

பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*


தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *


எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 


திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி)

இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்குப் பொருளுரை என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், பாசுரம் சொல்லும் சில சுவையான எண்ணங்களை/செய்திகளை கட்டாயம் பகிர வேண்டும்!

பொருளுரை:
முனிவன் - (எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும்) இறைவனும்
மூர்த்தி மூவராகி - நான்முகனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும்
வேதம் விரித்துரைத்த புனிதன்- நான்மறைகளை விளங்க உரைத்த தூயவனும்
பூவை வண்ணன் அண்ணல் - காயாம்பூ நிறம் கொண்ட, சர்வலோக ரட்சகனும்
புண்ணியன் விண்ணவர்கோன் - தர்மத்தின் நாயகனும், வானோர் தலைவனும்
தனியன் - ஆதி அந்தம் இல்லாதவனும், ஒப்பாரில் சுவாமியும்
சேயன் தானொருவனாகிலும்* - தான் ஒருவன் மட்டுமே மிகத் தொலைவில் இருப்பவனும் (ஆக இருந்தும்)
தன்னடியார்க்கு இனியன் * - தன் அடியவர்களுக்கு (தனது எளிமை குணத்தினால்) இனியவனும்
எந்தை எம்பெருமான்* - என் அப்பனும், என் பெருமானும் ஆன திருமால்
எவ்வுள் கிடந்தானே - திரு எவ்வுள்ளில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான்!


 பாசுரக் குறிப்புகள்: 

”வேதம் விரித்துரைத்த புனிதன்” - திருமங்கை மன்னன் பிறிதொரு பாசுரத்தில், “அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே” என்று ஓர் அன்னப்பறவை வடிவமாய், நான்மறைகளை நாராயணன் அருளியதைப் போற்றியிருக்கிறார்.  அங்கு “உரைத்த” என்று பாடிய ஆழ்வார், இங்கு “விரித்து உரைத்த” எனும்போது, அந்த வேதத்தின் சாரத்தை  பகவத்கீதையாக அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணபிரானைப் பாடுகிறார் என்று கொள்வது பொருத்தமானதே.

நான்மறைகளின் சாரத்தை திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி என நான்கு பிரபந்தங்களாக ஆதிகுருவான (மாறன்) நம்மாழ்வாரை அருளச் செய்த அப்பரந்தாமனைச் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதல்லவா! ”மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த”வர் அல்லவா! அதனால் தான் திருக்குருகைப் பிரான் ஆகிய நம்மாழ்வாரை இவ்வாறு ”மறைமுகமாக”ப் போற்றுகிறார் போலும் :-)

"தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு
நால்வேதம் கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே” 


இன்னொரு பாசுரத்தில் திருமங்கை மன்னன், “நால்வேதம் கண்டானே” என்று திருக்கண்ணபுரத்துப் பெருமாளைப் பாடியிருக்கிறார்.  செய்வினைச் சொற்றொடராகவேப் பார்த்தால், “நான்மறைகளை அருளிச் செய்தவனே” என்று நேர்ப்பொருள் கொள்ளலாம்.  ஆனால், குருபரம்பரை வழி வந்த ஞான ஆச்சார்யரான பராசர பட்டர், செயப்பாட்டு வினையாகக் கொண்டு சிறப்பான பொருள் ஏற்படும்படி அருளினார். 

அதாவது, “நால்வேதங்களால் காணப்பட்டவன்” என்று கொள்வதும் ஏற்றதே என்றார் பட்டர் பெருமான். ”உபாயமும் (வழியும்), உபேயமும் (இலக்கும்) தானேயாக, நான்கு வேதங்களாலும் அறுதியிடப் பட்டவன்” எனும்போது பொருட்சுவை கூடுகிறதல்லவா!

தனியன் - திருமாலுக்கு ஒப்பாக இன்னொருவர் அண்டத்தில் இல்லை என்று பொருள். அவன் ஒருவனே, உணர்வதற்கரிய பரம்பொருள்

சேயன் - ”எட்டா தூரத்தில் இருப்பவன்” என்பது நேரடிப் பொருளாக இருப்பினும், இப்பாசுரத்தில், ”எண்ணுதலுக்கு அரியவன், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவன்” என்று கொள்ளல் வேண்டும்

”திரு எவ்வுள்” என்பது மருவி ”திருவள்ளூர்” ஆகிவிட்டது :-) இந்த திவ்விய தேசப்பெருமாளின் திருநாமம் வீரராகவன். பிணி,வினை தீர்க்கும் இறைவன் என்பதால், வைத்திய வீரராகவன் என்றும் அழைப்பர். தாயாரின் திருநாமம் கனகவல்லி. சைவப்பெருந்தகையான இராமலிங்க அடிகளாரும் திரு எவ்வுள் பெருமாளைப் போற்றி திருப்பஞ்சகம் (5 பாடல்கள்) அருளியிருப்பது குறிப்பிடவேண்டியது.

பல்லவர்கள் கட்டிய பழமையான திருக்கோயில் இது. மூலவர் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். சென்னைக்கு அருகே உள்ள திருமழிசையில் அவதரித்த திருமழிசைப்பிரான் என்ற ஆழ்வாரின் (இத்தலப்பெருமாள் பற்றிய) பாசுரமும் பிரசித்தமானது.

“நாகத்தணை குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேரன்பில்
நாகத்தணை பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பர் கருத்தன் ஆவான்”



ஆழ்வார், பெருமாள் யோக நித்திரையில் துயிலும் திருத்தலங்களை பட்டியலிடுகிறார். திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர், திருவரங்கம், திருப்பேர் நகர், திருப்பாற்கடல் மற்றும் திருவன்பில் ஆகிய ஏழு வைணவ திருப்பதிகள் இதில் சுட்டப்பட்டுள்ளன. இந்த ஏழில், ஆழ்வார் அவதரித்த திருமழிசைக்கு அருகே உள்ள, அவர் அடிக்கடி தரிசித்த எவ்வுளுக்கு மட்டுமே “திரு” “வெவ்வுள்” என்ற மரியாதைக்குரிய விளித்தலை கவனிக்கவும் :-)

அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

pvr said...

எவ்வளவு பெரியவன். இருந்தும் 'தன்னடியார்க்கு இனியன்'. Thank you Bala for the joyful experience u give us. Regards, pvr.

said...

அழகான விளக்கம். திருமங்கையாழ்வாரின் பாசுரமும் மிக அழகு. எளிமையாகப் புரிந்தாலும் நீங்கள் விரித்துச் சொல்லும் போது இன்னும் சுவைக்கிறது.

தனியன் சேயன் போன்ற பெயர்களுக்கான விளக்கம் மிகமிகப் பொருத்தம்.

திருவள்ளூர் பெயர்க்காரணம் இந்தப் பதிவில் தெரிந்து கொண்டேன். திருவெவ்வுள் அழகான பெயர்.

enRenRum-anbudan.BALA said...

நன்றி, ஜிரா. உங்களைபப் போன்றவருக்குத் தான் எழுதுவதே. அதுவே ஆகச்சிறந்த தூண்டுகோல் :-)

enRenRum-anbudan.BALA said...

Thanks PVR. தன்யனானேன் :-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails